ஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு - தியானம் திக்ர்.


ஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்

மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயல்புகளில் ஒன்றுதான் திக்ர் எனும் இறை தியானம், இறை நினைவாகும்.
அல்லாஹ்வை பல விதங்களில் திக்ர் செய்யலாம். தொழுகை, பயான் மஜ்லிஸ்கள் கூட திக்ர்தான். இவ்வாறே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாவுகளால் அல்லாஹ்வை திக்ர் செய்வதும் சுன்னாவாகும் இவ்வாறு செய்யும் பழக்கம் எம்மிடம் மங்கி மறைந்துவிட்டது!
ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சுய விசாரணை செய்து கொள்வதற்காக இங்கே இது நினைவு கூறப்படுகின்றது.
மனிதனைப் படைக்கப் போவது பற்றி அல்லாஹ் மலக்குகளிடம் கூறிய போது,
‘நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோம். பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களையா படைக்கப் போகின்றாய் எனக் கேட்கின்றனர். (2:30)
இதிலிருந்து படைப்புக்களின் நோக்கங்களில் அல்லாஹ்வைத் துதிப்பதும் ஒன்று என்பதை அறியலாம்.
உள்ளம் அமைதிபெறும்:
இன்று வாழ்வதற்கான சகல வசதிகளையும் வளங்களையும் பெற்றவர்களும் நிம்மதியில்லாமல் நிலை குலைந்து போயுள்ளனர். அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமாக உள்ளங்கள் அமைதி பெறும் என அல்குர்ஆன் உள அமைதிக்கு வழிகாட்டுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.” (13:28)
கல்லாகும் உள்ளங்கள்:
இறை நினைவால் உள்ளங்கள் உருகுகின்றன. கல்லான உள்ளங்கள் கனிகின்றன. இறை தியானம் இல்லாவிட்டால் உள்ளம் கல்லாகும். இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
‘நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களது உள்ளங்கள், அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கும், (அவனிடமிருந்து) இறங்கிய சத்தியத்திற்கும் அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், இதற்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோர் போன்று இவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்களுக்கு (தூதர்களின் வருகையின்) காலம் நீண்டுவிட்டது. அதனால், அவர்களது உள்ளங்கள் கல்லாகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் பாவிகளாவர்.” (57:16)
இறை நினைவுதான் பெரியது:
இஸ்லாமிய இபாதத்துக்களின் நோக்கம் சதாவும் இறை நினைவுடன் வாழ்வது என்பதுதான்.
‘(நபியே!) இவ்வேதத்தில் உமக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக! மேலும், தொழுகையை நிலை நாட்டுவீராக! நிச்சயமாகத் தொழுகை மானக்கேடானதையும், வெறுக்கத்தக்கதையும் விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைவு கூருவது மிகப் பெரிதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.” (29:45)
தொழுகையும் இறை நினைவுக்கே!:
ஐந்து நேரத் தொழுகையை இஸ்லாம் கடமையாக்கியிருப்பதும் இறை நினைவு மங்கி மறையாமல் மனதில் மலர்ந்து கொண்டும் மணத்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
‘என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநாட்டுவீராக!” (20:14)
திக்ரின் பக்கம் விரையுங்கள்:
வெள்ளிக்கிழமை குத்பாவையும் தொழுகையையும் குர்ஆன் ‘திக்ர்” என்கின்றது. அதேவேளை, ஜும்ஆ முடிந்து வெளியில் பொருள் திரட்டும் போதும் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது வெற்றிக்கான வழி என்றும் குர்ஆன் கூறுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.”
‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.”
(62:9-10)
அதிகம் திக்ர் செய்ய வேண்டும்:
எம்மிடம் திக்ர் செய்யும் பழக்கம் மங்கி மடிந்துவிட்டது. ஆனால், அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுமாறு எமக்குக் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.” (33:41)
‘மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.” (33:42)
காலையிலும், மாலையிலும்:
நாம் காலையிலும் மாலையிலும்தான் அதிக டென்ஷனுக்குள்ளாகுகின்றோம். ஏற்கனவே நாம் பார்த்த வசனம் காலையிலும், மாலையிலும் விஷேடமாக அல்லாஹ்வை திக்ர் செய்யச் சொல்கின்றது. மற்றும் பல வசனங்களும் காலை, மாலை திக்ரை வலியுறுத்துகின்றன.
‘உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக!”
(76:25)
பள்ளிகளில் அதிகம் அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்பட வேண்டும்:
‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா திருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்; யாவற்றையும் மிகைத்தவன்.” (22:40)
இந்த வசனம் ஆலயங்கள் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்துப் பேசுகின்றது. மஸ்ஜித் பள்ளிகள் பற்றிக் கூறப்படும் போது அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படும் இடம் என சிறப்பாக சிலாகித்துக் கூறப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படுவதற்கும் பள்ளிகளின் பாதுகாப்புக்குமிடையில் ஏதோ தொடர்பு இருப்பதையும் இந்த வசனம் உணர்த்துவது போன்றுள்ளது.
அதிகம் தியாகம் செய்வோம்:
திக்ரின் சிறப்பு புரிகின்றது. அது எம்மிடமிருந்து மங்கி மறைந்து வருவதும் தெளிவாகத் தெரிகின்றது. எனவே, இறை நினைவை மரணிக்க விட்டு விடாது உயிர் கொடுத்து உறுதிப்படுத்த உறுதி கொள்வோம். அதிகமாக திக்ர் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முனைவோம்.
‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறு மையாளர்களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்களும், நினைவுகூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.” (33:35)
இந்த வசனத்தில் எல்லா அமல்களையும் தொடர்ந்து சொல்லும் அல்லாஹ் திக்ர் பற்றிக் கூறும் போது மட்டும் ‘கதீரா” அதிகம் திக்ர் செய்பவர்கள் என்று கூறுகின்றான். அதிகமாக திக்ர் செய்ய வேண்டும் என்பதைத்தானே இது உணர்த்துகின்றது.
அநியாயத்திற்குப் பின் உதவி:
அநீதமிழைக்கப்பட்ட சமூகத்திற்கு அல்லாஹ்வின் உதவி வர வேண்டும் என்றால் அதிகம் திக்ர் செய்யப்பட வேண்டும். இதைப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
‘யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்து, அல்லாஹ்வையும் அதிகம் நினைவுகூர்ந்து, தாம் அநீதி செய்யப்பட்ட பின் வெற்றி பெற்றார்களோ அவர்களைத் தவிர. அநியாயம் செய்தோர் தாம் செல்லும் இடம் எது என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள்.”
(26:227)
வெற்றி வரும்:
எதிரிகளைச் சந்திக்கும் போது உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரம் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்ய வேண்டும். அது வெற்றிக்கு வழியாக அமையும் என குர்ஆன் கூறுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (போரில்) ஏதேனும் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்தால் உறுதியாக இருங்கள். இன்னும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்.” (8:45)
அழைப்புப் பணிக்கும் அவசியம்:
அழைப்பாளர்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்பவர்களாக இருக்க வேண்டும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. இந்தக் குணம் குன்றிக் குறைந்து போயுள்ளமை எம்மிடம் உள்ள மிகப் பெரும் குறையாகும்.
மூஸா(அ) அவர்களிடம் அல்லாஹ் தூதுத்துவப் பணியை ஒப்படைத்த போது தனது பணியைத் திறம்படச் செய்ய பின்வருமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.
‘(அதற்கு மூஸா) ‘எனது இரட்சகனே! எனக்கு என் உள்ளத்தை நீ விரிவுபடுத்து வாயாக! எனக் கூறினார்.”
‘என் காரியத்தை எனக்கு இலகுபடுத்து வாயாக!”
‘என் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக!”
‘(அப்போது) அவர்கள் எனது பேச்சை விளங்கிக் கொள்வார்கள்.”
‘எனது குடும்பத்திலிருந்து எனது சகோதரர் ஹாரூனை ஓர் உதவியாளராக நீ எனக்கு ஏற்படுத்துவாயாக!”
‘அவர் மூலம் எனது பலத்தை உறுதிப்; படுத்துவாயாக!”
‘என் காரியத்தில் அவரையும் இணைத்து விடுவாயாக! உன்னை நாம் அதிகம் துதிப்பதற்காக.”
‘உன்னை நாம் அதிகம் நினைவுகூர் வதற்காகவும் (இவ்வாறு செய்வாயாக!)”
(20:25-34)
இதில் தனது சகோதரர் ஹாரூன்(அ) அவர்களையும் நபியாக ஆக்குமாறு கேட்கின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘உன்னை அதிகம் தஸ்பீஹ் செய்ய வேண்டும், அதிகம் திக்ர் செய்ய வேண்டும் என்பதுதான். எனவே, இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் எமது பணியில் உயிரோட்டத்தையும் உளப்ர்வபூமான ஈடுபாட்டையும் உண்டாக்கும். இதற்காக எம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோமாக!
ஆக்கம் : மெளலவி இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர் : உண்மை உதயம் மாத இதழ்)

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil