இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

بسم الله الرحمن الرحيم

இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்'(ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.” (3:59)

இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் கூறுவதென்றால் தாயும் தந்தையும் இன்றிப் படைக்கப்பட்ட ஆதத்தையும் கூட கடவுள் என்றல்லவா கூற வேண்டும். இவ்வாறே ஏவாளுக்கும் தாய்-தந்தை என்று யாரும் இல்லை. அவரைக் கடவுளின் குமாரத்தி என்று கூறுவார்களா? பைபிள் மற்றுமொரு விசித்திர மனிதர் பற்றிப் பேசுகின்றது.

[எபிரேயர்:07] மெல்கி சேதேக்கு என்றொருவர் பற்றிப் பேசுகின்றது. அவருக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை என்று கூறப்படுகின்றது. தந்தை இல்லாமல் பிறந்ததால் இயேசு கடவுள், கடவுளின் குமாரன் என்று கூறுவதென்றால் கிறிஸ்தவ உலகு இவரையும் கடவுள் என்று கூற வேண்டும்.

எனவே, கிறிஸ்தவ உலகு முரண்பட்ட தொரு கொள்கையை உருவாக்கியுள்ளது என்பதை இந்த வசனம் தர்க்கரீதியாக விளக்குகின்றது.

யூதர்களின் சதித்திட்டங்களில் ஒன்று:

“வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தங்களுக்கிடையில்) ‘நம்பிக்கை கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை முற்பகலில் ஏற்று பிற்பகலில் மறுத்துவிடுங்கள்;(இதனால்) அவர்களும் (மார்க்கத்தை விட்டும்) திரும்பி விடக்கூடும்’ என்று கூறுகின்றனர்.” (3:72)

யூதர்களில் ஒரு கூட்டத்தினர் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இஸ்லாத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காக இப்படிப்பட்ட ஒரு திட்டத்தைத் தீட்டினர். காலையில் முஹம்மத்(ச) அவர்கள் உண்மையான இறைத் தூதர் என ஏற்றுக் கொள்வது, மாலையில் தவ்றாத்தில் கூறப்பட்ட தூதர் இவர் இல்லை என யூத மதத்திற்கு மீண்டும் மாறிவிடுவது. இதைப் பார்க்கும் முஸ்லிம்களுக்கும் நாம் இருப்பது சரியான வழியா? என்ற ஐயத்தை ஏற்படுத்தும். முஸ்லிம் அல்லாத பொது மக்களின் பார்வையில் யூதர்கள் வேத அறிவுமிக்கவர்கள். அவர்களே இவரை ஏற்று விட்டு மறுக்கின்றனர் என்றால் ஏதோ பிரச்சினை இருக்க வேண்டும் என்று இஸ்லாத்தில் இணையத்தயங்குவர். அத்துடன் இஸ்லாத்தை விட தவ்றாத்தை ஏற்பது நல்லது என நினைப்பர். இந்த சதித்திட்டத்தைத் தீட்டி அவர்கள் செயற்படுத்தும் போது அல்லாஹு தஆலா அது குறித்து நபிக்கு அறிவித்து அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து அவர்களின் முகத்திரையைக் கிழித்தான்.

விமர்சனத்தில் நடுநிலை:

“ஒரு செல்வக் குவியலையே அவர்களி டம் நீர் நம்பி ஒப்படைத்தாலும் அதை உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதத்தையுடையோரில் உள்ளனர். ஒரு தீனாரைக் கூட அவர்களிடம் நீர் நம்பி ஒப்படைத்து, நீர் விடாப்பிடியாக (கேட்டு) நின்றாலே தவிர, அதை உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். உம்மிய்யுன்கள் (எனும் யூதர்கள் அல்லாதோர்) விடயத்தில் எம்மீது (குற்றம் பிடிக்க) எந்த வழியும் இல்லை என (யூதர்களான) அவர்கள் கூறுவதே இதற்குக் காரணமாகும். மேலும் அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகின்றனர்.” (3:75)

இஸ்லாம் யூத-கிறிஸ்தவர்களைக் கொள்கை ரீதியில் கடுமையாக விமர்சிக்கின்றது. யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாத்திற்கு எதிராக பல சதிகள் செய்து வந்தனர்; செய்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் பற்றி விமர்சிக்கும் போதும் இஸ்லாம் நடுநிலையான தரத்தைக் கடைப்பிடித்து வந்தது என்பதற்கு இந்த வசனம் தெளிவான சான்றாகும். அவர்களில் சிலர் மிகவும் பண்பானவர்கள் என்று கூறுவதுடன் சிலர் மோசடி செய்ததாகவும் யூதர்கள் அல்லாதவர்களை ஏமாற்றுவது குற்றமில்லை என்ற பொய்யான கொள்கையே இதற்குக் காரணம் என்றும் கூறுகின்றது. விமர்சனத்தில் நடுநிலைப் போக்குக்குத் தேவை என்ற நிதானமான பார்வையை இந்த வசனம் வலியுறுத்துகின்றது.

மதகுருக்களின் துரோகச் செயல்கள்:

“நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்தில் இல்லாததை வேதத்தில் உள்ளது என நீங்கள் நினைப்பதற்காக வேதத்தை ஓதுவது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ‘மேலும், அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ என்றும் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகின்றனர்.” (3:78)

யூத, கிறிஸ்தவ வேதங்கள் அந்தந்த மதகுருக்களாலேயே திரிவுபடுத்தப்பட்டன. வேதத்தின் மொழியையும் வேதத்தையும் மதகுருக்கள் மட்டுமே அறிந்திருந்தனர். சமஸ்கிருத மொழியை அறிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பது போல் அவர்களின் வேத மொழியை அறிந்தவர்கள் ஒரு சிலரே இருந்தனர். மக்கள் வேதத்தையும் வேத மொழியையும் அறியாது இருந்தனர்.

எனவே, வேதம் என மதகுருக்கள் சொல்வதை நம்புவதைத் தவிர வேறு வழி மக்களுக்கு இருக்கவில்லை. மதகுருக்கள் வேதத்தில் இல்லாதவைகளையும் வேதம் ஓதும் பாணியில் ஓதி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என இந்த வசனம் கூறுகின்றது. உண்மையையும் பொய்யையும் கலந்து ஏமாற்றி வந்தனர். மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி வந்தனர் என பல குற்றச் சாட்டுக்களைக் குர்ஆன் முன்வைத்துள்ளது.

“வேதத்தையுடையோரே! நீங்கள் அறிந்து கொண்டே ஏன் சத்தியத்தை அசத்தியத்துடன் கலந்து சத்தியத்தை மறைக்கின்றீர்கள்?” (3:71)

“வேதத்தையுடையோரே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர வேறு எதனையும் கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவன் அதை மர்யமுக்கு (ஜிப்ரீல் மூலமாக) போட்டான். இன்னும் (அவர்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுளை) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டு விடுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (4:171)

“வேதத்தையுடையோரே! உண்மைக்கு மாற்றமாக நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். இன்னும், இதற்கு முன்னர் வழிகெட்டுப் போன கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். அவர்கள் அதிகமானோரை வழிகெடுத்து, தாமும் சரியான வழியை விட்டும் தவறி விட்டனர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (5:77)

“அவர்கள் இரகசியமாக வைத்திருப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?”
“அவர்களில் (எழுத்தறிவற்ற) ‘உம்மி’களும் உள்ளனர். அவர்கள் வெறும் கற்பனைகளைத் தவிர வேதத்தை அறியமாட்டார்கள். அவர்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை.” “அற்ப கிரயத்தைப் பெறுவதற்காக தம் கைகளால் ஒரு நூலை எழுதி பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றவர்களுக்குக் கேடுதான். அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான். (அதன் மூலம்) அவர்கள் சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்.”
(2:77-79)

“நம்பிக்கைகொண்டோரே! நிச்சயமாக (யூத, கிறிஸ்தவ) மத அறிஞர்கள் மற்றும் துறவிகளில் அதிகமானோர் மனிதர்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்கின்றனர். மேலும், (பிறரை) அல்லாஹ்வின் பாதையைவிட்டும் தடுக்கின்றனர். எவர்கள் தங்கம், வெள்ளியைச் சேமித்து, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கவில்லையோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (9:34)

இவ்வாறான வசனங்கள் யூத-கிறிஸ்தவ மதகுருக்கள் வேதத்தைத் திரித்து மக்களை ஏமாற்றி ஏப்பம் விட்டு வந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

இதே வேளை, குர்ஆன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த போது வேதத்தில் இல்லாததை நாம் கூறவில்லை எனக் கூறும் துணிச்சலோ, தூய்மையோ, திராணியோ அன்று வாழ்ந்த யூத-கிறிஸ்தவ அறிஞர்களிடம் இருக்கவில்லை. குர்ஆன் கூறும் செய்தி உண்;மை என்பதை அவர்களின் மௌனம் உணர்த்தியது.

அடுத்து, முஹம்மத் நபி எழுத, வாசிக்கத் தெரியாதவர், வேத அறிவு அற்றவர், முன்னைய வேதங்களைக் கற்றவர் அல்லர். அவர் யூத-கிறிஸ்தவ மதகுருக்கள் வேதத்தில் இல்லாதவற்றை வேதம் என பொய்யாகச் சொல்கின்றார்கள் என்று கூறுகின்றார் என்றால் அவருக்கு வஹி அருளப்பட்டாலே தவிர, இது சாத்தியம் இல்லை. யூத-கிறிஸ்தவ மக்களே வேதத்தில் என்ன இருக்கின்றது என்பதை அறியாதிருந்த போது வேதத்தில் இல்லாததைச் சொல்கின்றார்கள் என்றும் முஹம்மத் நபி கூறுகின்றார் என்றால் அவர் ஒரு இறைத்தூதர் என்பதற்கான ஆதாரமாகக் கூட இது அமைந்துள்ளதை அறியலாம்.

ஆக்கம் : மெளலவி SHM. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம் மாத இதழ் இலங்கை)

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil