விடிந்தால் மறுமை ......


                     بسم الله الرحمن الرحيم
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் எழுதிய அஸ்ஸுஹ்து என்ற நூலிலிருந்து .....இமாம் ஹசன் இப்னு அபுல் ஹசன் (ரஹ்) அவர்களின் நாற்பது கூற்றுகளும் அவற்றின் விளக்கங்களும்.
தொடர் - 1
 
                விடிந்தால் மறுமை ......

1445. இமாம் ஹசன் பஸரி (ரஹ்) அவர்கள் ஒரு நாள் ரஜப் மாதத்தில் மஸ்ஜிதில் இருந்த போது தண்ணீரை உறிஞ்சி துப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெருமூச்சு விட்டார்கள், பிறகு அழுதார்கள், அதனால் அவர்களுடைய இரு புஜங்களும் குலுங்கின. பிறகு கூறினார்கள். " (நமது) உள்ளங்களில் உயிர் இருந்திருந்தால்,
(நமது) உள்ளங்களில் சீர்திருத்தம் இருந்திருந்தால் ஓர் இரவை நினைவு கூர்ந்து உங்களை நான் அழவைத்திருப்பேன்".

அந்நாளின் விடிகாலை மறுமை நாளாகும். நிச்சயமாக விடிந்தால் மறுமை நாளாக அமைகின்ற அந்த ஓர் இரவு, அந்த மறுமை நாளை விட அதிகமாக மறைவிடங்கள் வெளிப்படுகின்ற, கண்கள் அழுகின்ற ஒரு நாளை படைப்பினங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

விளக்கம்:
         
          இமாம் அவர்கள் அதிகம் மறுமையைப் பயப்படுபவர்களாக, அதை அதிகம் நினைவு கூர்பவர்களாக அதைப் பற்றி மக்களை அதிகம் எச்சரிப்பவர்களாக இருந்தார்கள்.

இது தான் உண்மையான மார்க்க அறிஞர் செய்ய வேண்டிய கடமையாகும்.இது தான் நல்ல கல்விமான்களுடைய அடையாளமாகும்.

நல்ல கல்விமான்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவார்கள். நபிமார்கள் மக்களுக்கு மறுமையைப் பற்றித்தான் எச்சரித்தார்கள். மாறி வரும் துன்யாவைப் பற்றி அவர்கள் கவலைப் பட்டது இல்லை. அது பற்றி மக்களை பயமுறுத்தியதுமில்லை.

மறுமையின் பயம் உள்ளங்களில் வர வேண்டுமென்றால் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளத்தில் இறை நம்பிக்கை என்ற உயிரும் இறையச்சம் என்ற சீர்திருத்தமும் இருந்தால் தான் நல்லுபதேசம் பலனளிக்கும். இல்லையென்றால் பாறையில் பெய்கின்ற மழையைப் போன்றுதான் நல்லுபதேசம் பயனற்றுப் போகும்.

அந்த மறுமையில் மக்கள் ஆடையில்லாமல் எழுப்பப்படுவார்கள். அன்று அங்கு அழுவதைப் போன்று வேறு எங்கும் அழுதிருக்க மாட்டார்கள். அங்கு மக்கள் அழுகின்ற அழுகையின் கண்ணீரில் கப்பலே மிதக்கும். அந்த அளவு அழுவார்கள்.

ஒவ்வொரு நாள் இரவில் தூங்கும் போதும், அன்று விடிந்தால் மறுமை நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஒரு முஃமின் இருக்க வேண்டும்.

ஒருவருக்கு ஏற்படும் மரணமும் அவருக்கு ஒரு மறுமைதான். ஒருவன் மரணித்துவிட்டால் அவனுடைய மறுமை அவனுக்கு நிகழ்ந்து விடுகிறது. அவனுடைய சொர்க்க, நரகம் அவனுக்கு காண்பிக்கப்படுகிறது. அவனுடைய செயல்கள் பற்றி அவனிடம் விசாரணை செய்யப்படுகிறது.

அல்லாஹ் நம் அனைவரையும் மறுமையின் துன்பங்கள், துயரங்களிலிருந்து பாதுகாப்பானாக!

அழக்கூடிய கண்கள் மறுமையை நினைத்து அழட்டும்! தனது பாவங்களை நினைத்து அழட்டும்! அல்லாஹ்விற்க்கு முன் நிற்கின்ற அந்த நாளின் திடுக்கத்தை நினைத்து அழட்டும்! இறுதி இல்லம், நிலையான தங்குமிடம் எது என்று நினைத்து அழட்டும்! ஏடுகள் எந்த கரத்தில் கொடுக்கப்படும் என்று நினைத்து அழட்டும்!

நன்மையின் தட்டுகள் கனக்குமா ? அல்லது தீமைகள் தட்டு கனக்குமா? என்று நினைத்து அழட்டும்! வலது பக்கம் திருப்பப்படுவோமா அல்லது இடது பக்கமா என்பதை எண்ணி அழட்டும் !

யா நஃப்சீ! யா நஃப்சீ! என்று மக்கள் அல்லல்படும் அந்தக் காட்சியை நினைத்து அழட்டும்! தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரன் சகோதரிகளை விட்டு மனிதன்விரண்டு ஓடுகின்ற நாளை நினைத்து அழட்டும்!

குழந்தைகளின் தலை நரைத்து விடும் நாளை நினைத்து அழட்டும்! உள்ளங்களின் இரகசியங்கள் வெளிப்படும் நாளை நினைத்து அழட்டும்! இன்னும் ஆயிரக்கணக்கான அமலிகள் உடைய நாளை நினைத்து அழட்டும்!

அதை நினைத்து தான் இமாம் கூறுகிறார்கள், "உயிருள்ள உள்ளத்தை உடைய கண்கள் தான் அழும். சீர்திருத்தம் பெற்ற இதயத்தை உடைய கண்கள் தான் அழும்."

. அல்லாஹ் நமக்கு அந்த உள்ளத்தை தருவானாக! அழக்கூடிய கண்களை தருவானாக ! உள்ளம் இறுகுவதை விட்டும் கண்கள் அழாமல் இருப்பதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக !

ஆமீன் !

தயாரிப்பு : Islaam For All Peoples

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil