ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-7
بسم الله الرحمن الرحيم
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-7 (14.05.2018)
தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.
1)பொறுமை ஓர் பொக்கிஷம்; அது ஒர் நோய் நிவாரணி!
அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“ பொறுமை (الصبر) எனும் இந்த மூன்று எழுத்துக்களுக்குக் கீழே இருக்கும் புதையலை ஒரு மனிதன் அறிந்து விட்டால் அதை (எடுப்பதை) விட்டும் பின்வாங்கமாட்டான்!
{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்', 1/266 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ لو علم العبد الكنز الذي تحت هذه الأحرف الثلاثة أعني إسم (الصبر) لما تخلّف عنه ]* {طريق الهجرتين، ١/٢٦٦}
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் இன்னொரு இடத்தில் கூறுகின்றார்கள்:-
“அதிகளவிலான உடல், உள நோய்கள் பொறுமையின்மையால்தான் ஏற்படுகின்றன. உள்ளங்கள், உடல்கள், உயிர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியம் பொறுமையைப் போன்ற வேறு எந்த ஒன்றின் மூலமும் பாதுகாக்கப்பட்டதாக இருப்பதில்லை! ஆகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதும், சிறந்ததோர் மருந்தாக இருப்பதும் இந்த பொறுமைதான். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்; அவனது நேசமும் அவர்களுக்குத்தான் உண்டு; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கின்றான்; அவன் உதவியும் அவர்களுக்குத்தான் உண்டு; பொறுமையுடன்தான் உதவி இருக்கிறது; பொறுமையாளர்களுக்கு இதுதான் சிறந்ததாகும். அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பொறுமையுடன் இருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்'
(அல்குர்ஆன், 16:126) ”
{ நூல்: 'ஸாதுல் மஆத்', 4/306 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ أكثر أسقام البدن والقلب، إنّما تنشأ عن عدم الصبر، فما حفظت صحةالقلوب والأبدان والأرواح بمثل الصبر! فهو الفاروق الأكبر، والتّرياق الأعظم، فإن الله مع الصابرين، ومحبّته لهم، فإن الله يحبّ الصابرين، ونصره لأهله، فإن النصر مع الصبر، وإنه خير لأهله، قال تعالى: « ولئن صبرتم لهو خير للصّابرين » ]* { زاد المعاد، ٤/ ٣٣٣ }
அதாஃ இப்னு அபீ ரபாbஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடம், “சுவர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அதற்கவர்கள், “இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். (ஒருமுறை) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உமக்கு சுவர்க்கம் கிடைக்கும். நீர் விரும்பினால் உமக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்!” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன்!. ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அதாஃ இப்னு அபீ ரபாbஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்: “நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தான் கறுப்பான, உயரமான அப்பெண் ஆவார்!.
{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 5652 }
2)தாயின் பொறுப்புணர்ச்சிக்கும், தந்தையின் பொடுபோக்கிற்கும் மத்தியில் பிள்ளை வளர்ப்பு!
மதிப்பிற்குரிய எமது ஆசான், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அவரது மாணவர் அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-
“தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொண்ட கணவன்-மனைவி இருவர் தமது சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு விடயமாக நீதிபதியிடம் முரண்பட்டுக்கொண்டனர். அப்போது, அவ்விருவரில் எவரின் பராமரிப்பில் இருப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை நீதிபதி சிறுவனுக்கு வழங்கினார். சிறுவனோ தந்தையைத் தெரிவு செய்துகொண்டான். அப்போது நீதிபதியிடம் அவனின் தாய், “என்ன காரணத்திற்காக அவனின் தந்தையை அவன் தெரிவு செய்தான்?”என்று அவனிடம் கேளுங்கள் என்றாள்.
நீதிபதியும் அச்சிறுவனிடம் கேட்டார். அதற்கு அவன், “ஒவ்வொரு நாளும் என்னை எனது தாய் இஸ்லாத்தின் ஆரம்ப விடயங்களும், அல்குர்ஆனும் படித்துத் தரப்படும் 'குர்ஆன் மத்ரசா'வுக்கு அனுப்பி வைக்கின்றாள். அங்கே விளக்கம் சொல்லித் தருபவர் எனக்கு அடிக்கின்றார். ஆனால், எனது தந்தையோ என்னை சிறுவர்களோடு விளையாடுவதற்கு விட்டு விடுகின்றார்!”என்று சொன்னான். இதைக்கேட்ட நீதிபதி, தாயின் பராமரிப்பிலலேயே சிறுவன் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிவிட்டு, “இச்சிறுவனைப் பராமரிக்க நீர்தான் அதிக உரிமையுடையவர்!”என்றும் அத்தாய்க்குக் கூறினார்கள்.
{ நூல்: 'ஸாதுல் மஆத்', 5/475 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ وسمعت شيخنا - يعني شيخ الإسلام إبن تيمية - رحمه الله تعالى يقول: تنازع أبوان صبيّا عند بعض الحكام، فخّيّره بينهما، فاختار أباه.
*فقالت الأم:* سله: لأيّ شيئ إختار أباه؟ فسأله - يعني القاضي.
*فقال الصبيّ:* "أمي تبعثني كل يوم للكتّاب والفقيه يضربني! وأبي يتركني ألعب مع الصّبيان..!"
فقضى به للأم وقال: "أنت أحقّ به !".
{ زاد المعاد ، ٥/٤٧٥ }
3)இஸ்லாமிய ஆட்சியாளரை இறையச்சமும், மறுமைச் சிந்தனையும் வழிநடாத்திச் சென்றது!
கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி 'பாத்திமா பின்த் அப்துல் மலிக் (ரஹ்)' கூறுகின்றார்கள்:-
“கலீபா உமரை விட அதிகமாகத் தொழுது, நோன்பு நோற்கக்கூடிய வேறொருவரையோ, அவரைவிட தனது இரட்சகனை அதிகம் அஞ்சி நடக்கும் வேறு எவரையோ நான் கண்டதில்லை! இஷாத் தொழுகையை அவர்கள் தொழுதுவிட்டு, அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும் வரை அழுதவர்களாகவே அமர்ந்துகொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும்வரை அழுதுகொண்டே இருப்பார்கள்!.
படுக்கை விரிப்பில் என்னோடு அவர்கள் இருந்துகொண்டு மறுமை விடயம் குறித்துச் சிந்தித்து, தண்ணீருக்குள் விழுந்த சிட்டுக்குருவி பதறித் துடிப்பது போல் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். அவர் அழுது உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரின் மீது நான் இரக்கப்பட்டு போர்வையொன்றை அவருக்கு மேல் போட்டு, “எமக்கும் இந்த ஆட்சிக்குமிடையில் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா?!” ௭ன்று சொல்லிக்கொள்வேன். அல்லாஹ் மீது ஆணையாக! ஆட்சிக்குள் நாம் புகுந்து கொண்ட நாள் முதல் மகிழ்ச்சியை நாம் கண்டதே இல்லை!.
{ நூல்: 'அல்பிbதாயா வந்நிஹாயா' லில்ஹாபிfழ் இப்னு கஸீர், 10/204 }
قالت إمرأة عمر بن عبدالعزيز فاطمة بنت عبد الملك:
*[ ما رأيت أحدا أكثر صلاة وصياما منه، ولا أحدا أشدّ فرقا من ربّه منه. كان يصلّي العشاء ثم يجلس يبكي حتى تغلبه عيناه، ثم ينتبه فلا يزال يبكي حتى تغلبه عيناه...*
*قالت: ولقد كان يكون معي في الفراش فيذكر الشيئ من أمر الآخرة فينتفض كما ينتفض العصفور فى الماء، ويجلس يبكي فأطرح عليه اللّحاف رحمة له وأنا أقول « ياليت كان بيننا وبين الخلافة بعد المشرقين! » ، فوالله ما رأينا سرورا منذ دخلنا فيها ]*
{ البداية والنهاية للحافظ ابن كثير ، ١٠ / ٢٠٤ }
இமாம் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அறிஞர்களை ஒன்றுகூட்டுபவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் சேர்ந்து மரணம், விசாரணைக்காக எழுந்து நிற்றல், மறுமை வாழ்க்கை ஆகியவை குறித்து நினைவூட்டல் செய்துகொண்டு மரணித்த ஒருவரின் உடல் (ஜனாஸா) ஒன்று தமக்கு முன்னால் இருப்பது போல அழுதுகொண்டிப்பார்கள்!”
{ நூல்: 'அத்தஸ்கிரா பிஅஹ்வாலில் மவ்தா வஉமூரில் ஆஹிரா', பக்கம்: 125 }
قال الإمام التيمي رحمه الله تعالى:
*[ وكان عمر بن عبدالعزيز رحمه الله تعالى عنه يجمع العلماء فيتذاكرون الموت،والقيامة،والآخرة . فيبكون حتى كأن بين أيديهم جنازة! ]*
{ التذكرة بأحوال الموتى وأمور الآخرة ، ص - ١٢٥ }
4)நபியின் மீது நேசம் இருந்தால் அவரின் வழிமுறையையே மதித்துப் பின்பற்றுங்கள்!!
இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை கிடைக்கப்பெற்று அதைப் புரிந்துகொண்ட ஒவ்வொருவரும் சமூகத்திற்கு அதைத் தெளிவுபடுத்துவதும் உபதேசிப்பதும் கட்டாயமானதாகும். சமூகத்தில் கண்ணியமிக்கவரின் கருத்து நபியின் வழிமுறைக்கு மாற்றமாக இருப்பினும், நபியின் கட்டளையைப் பின்பற்றும்படியே அவர் அவர்களுக்கு ஏவ வேண்டும். ஏனெனில், நபியின் கட்டளையே (சமூகத்தில்) கண்ணியப்படுத்தப்படுபவரின் கருத்தைவிட கண்ணியப்படுத்தப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் மிகத் தகுதியானதாகும்.
நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும் ஆதாரபூர்வமான சுன்னாவுக்கு முரண்பாடாக நடந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் மறுப்புக் கொடுத்தது இந்த வகையில்தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். மறுப்புக்கொடுத்தலில் சிலபோது கடும்போக்கைக்கூட அவர்கள் கடைப்பிடித்தார்கள். இது, (சுன்னாவுக்கு முரணாக நடந்த) இவர் மீதுள்ள கோபத்தினால் அல்ல! மாறாக, அவர்களிடம் இவர் நேசத்திற்குரியவராகவும், அவர்களின் உள்ளங்களில் கண்ணியத்திற்குரியவராகவுமே இருந்தார். என்றாலும், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அதிக நேசத்திற்குரியவராக இருந்தார்; தூதரின் கட்டளையே அனைவரின் கட்டளையையும்விட அவர்களிடம் உயர்வாக இருந்தது.
ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளையும், அவரல்லாத ஒருவரின் கட்டளையும் ஒரு விடயத்தில் முரண்பட்டால் ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளைதான் முற்படுத்தப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் மிக ஏற்றமானதாகும். இதனால்தான் இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்கள், தனது கூற்றுக்கு மாற்றமாக ஆதாரபூர்வமான ஹதீஸ் வந்துவிட்டால் குறிப்பிட்ட அந்த ஹதீஸ் பின்பற்றப்பட்டு, தனது கூற்று விட்டுவிடப்பட வேண்டும் என வஸிய்யத் செய்தார்கள்.
இவ்வாறுதான் பெரும் ஷெய்குமார்களும் மார்க்க ஞானமுடையவர்களும்,சத்தியத்தைச் சொல்பவர் சிறியவராக இருந்தாலும் அல்லது பெரியவராக இருந்தாலும் அந்த சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் செய்பவர்களாகவும், அவரின் கூற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருந்தார்கள்!”
{ நூல்: 'மஜ்மூஉர் ரசாயில்', 1/245 }
قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:-
*[ الواجب على كل من بلغه أمر الرسول وعرفه أن يبيّنه للأمة وينصح لهم. ويأمرهم باتّباع أمره، وإن خالف ذلك رأي عظيم من الأمة، فإن أمر الرّسول صلّى الله عليه وسلم أحق أن يعظم ويقتدى به من رأي معظم.*
*ومن هنا ردّ الصحابة ومن بعدهم من العلماء على كل من خالف سنّة صحيحة، وربما أغلظوا في الرّدّ، لا بغضا له؛ بل هو محبوب عندهم، معظم في نفوسهم؛ لكن رسول الله صلى الله عليه وسلم أحب إليهم، وأمره فوق أمر كل مخلوق.*
*فإذا تعارض أمر الرّسول صلى الله عليه وسلم وأمر غيره فأمر الرّسول صلى الله عليه وسلم أولى أن يقدم ويتبع، كما أوصى الشافعي رحمه الله تعالى- إذا صحّ الحديث في خلاف قوله- أن يتبع الحديث ويترك قوله....*
*وكذلك المشائخ والعارفون كانوا يوصون بقبول الحق من كل من قال الحق صغيرا أو كبيرا، وينقادون لقوله]*
{ مجموع الرسائل ، ١/٢٤٥ }
அல்லாஹ் கூறுகிறான்:-
“(நமது தூதராகிய) அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்!”
(அல்குர்ஆன், 24:63)
5)மனைவியின் குறைகளுக்காக மனதைக் குழப்பிக்கொள்ளாமல், அவர்களின் நிறைகளில் இன்பம் காணுங்கள்!!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கென அல்லாஹ் விதித்திருக்கும் விடயங்களை எடுத்து நடப்பது கணவன்-மனைவி ஆகிய ஒவ்வொருவர் மீதும் அவசியமானதாகும். மனைவியை விட தானே உயர்ந்தவன் என்பதற்காகவோ, அவளின் விவகாரம் தன் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவோ அவள் மீது கணவன் ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறே மனைவியும் கணவனுக்கெதிராக உயர்வுபாராட்டி நடப்பதும் ஆகாது. மாறாக, அவ்விருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரோடு அழகிய முறையில் குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டியது கட்டாயமானதாகும்.
கணவனுக்குரிய கடமையை நிறைவேற்றும் விடயத்தில் மனைவியிடமிருந்து ஏற்பட்ட குறைபாடு, அல்லது அவளது புத்தியிலும் சிந்தனைத் திறனிலும் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களுக்காக மனைவியைப் பற்றிய வெறுப்பு கணவனிடமிருந்து சில வேளை ஏற்படலாம் என்பது தெரிந்த விடயமே! இப்படியான நேரத்தில் இந்த மனைவியுடன் கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் இதற்கான தீர்வு இருக்கிறது.
அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் சரியே! (பொறுத்துக்கொள்ளுங்கள்!) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக்கூடும்.”
(அல்குர்ஆன், 4:19)
நடைமுறை வாழ்வில் இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது! சில வேளை, ஏதேனும் ஒரு காரணத்திற்காக தனது மனைவியை வெறுக்கும் ஒருவன் பின்னர் பொறுமை காக்கின்றான். இதன்மூலம் இவனில் நிறைய நலவுகளை அல்லாஹ் ஆக்கி விடுகின்றான்! இதனால் வெறுப்பு விருப்பாகவும், சோர்வு உற்சாகமாகவும் மாறி விடுகிறது.
நபி (ஸல்) அவர்களும், “இறைவிசுவாசமுள்ள ஒரு கணவன், இறைவிசுவாசமுள்ள மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடமிருக்கும் தீய பண்பு ஒன்றை அவன் வெறுத்தாலும், அவளிடமிருக்கும் நல்ல பண்பு ஒன்றில் அவன் திருப்தி காண்பான்!”என்று கூறினார்கள்.
தனது நோக்கமும் விருப்பமும் சரியாகப் பூர்த்தியான எவராவது ஒருவர் இவ்வுலகில் இருக்கின்றாரா? இல்லை; அறவே இல்லை! இவ்வுலகில் உனது விருப்பம்கூட சரியாகப் பூர்த்தியாகி இருக்காது. ஏதாவது ஒன்றில் ஒரு விடயம் பூர்த்தியாகி இருந்தாலும் மற்றொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும். நாட்களும் இவ்வாறுதான்! இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:“இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்”. (அல்குர்ஆன், 3:140)
இவ்வுலகம் ஒரே நிலையில் இருந்து கொண்டிருக்காது. இதை நீ பரீட்சித்துப்பார்; கண்டு கொள்வாய்! உனது மனைவியிடமிருந்து ஒன்றை நீ வெறுத்தால் அவளிடமிருந்து நீ திருப்தி காணும் ஒன்றைக் கொண்டு அதை நீ எதிர்கொள்!
{ நூல்: 'லிகாஆதுல் பாபில் மப்fதூஹ்', முன்னுரைப் பாகம் - பக்கம்: 159 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ الواجب على كل من الزوجين أن يقوم بما أوجب الله عليه من العشرة الحسنة، وأن لا يتسلط الزوج على الزوجة لكونه أعلى منها، وكون أمرها بيده، وكذلك للزوجة لا يجوز أن تترفع على الزوج، بل على كل منهما أن يعاشر الآخر بالمعروف.*
*ومن المعلوم أنه قد يقع من الزوج كراهة للزوجة، إما لتقصيرها في حقه، أو لقصور في عقلها وذكائها وما أشبه ذلك. فكيف يعامل هذه المرأة؟ نقول: هذا موجود في القرآن وفي السنة، قال الله تبارك وتعالى:*
*« فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا »*
*وهذا هو الواقع، قد يكره الإنسان زوجته لسبب، ثم يصبر، فيجعل الله عز وجل في هذا خيرا كثيرا، تنقلب الكراهة إلى محبة، والسآمة إلى راحة.*
*وقال النبي صلى الله عليه وسلم: « لا يفرك مؤمن مؤمنة - يعني: لايبغضها ولا يكرهها - إن كره منها خلقا رضي منها خلقا آخر » هل أحد يتمّ له مراده في هذه الدنيا؟ لا، أبدا؛ لا يتم مرادك في هذه الدنيا.وإن تم في شيئ نقص في شيئ، حتى الأيام، يقول الله عز وجل: « وتلك الأيام نداولها بين الناس »*
*وجرّب هذا تجد، لا تبقى الدنيا على حال واحد، فإذا كرهت من زوجك شيئا فقابله بما يرضيك]*
{ لقاءات الباب المفتوح، مقدمة الجزء ، ١٥٩ }
6)அழுகின்றவனெல்லாம் அநீதியிழைக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல!!
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
நீதிபதி ஷுரைஹ் அவர்களிடம் அழுதவளாக ஒரு பெண்மணி வந்து மனிதர் ஒருவர் குறித்து முறைப்பாடு செய்தாள். அப்போது அங்கிருந்த இமாம் ஷஃபிb (ரஹ்) அவர்கள்:
“உமைய்யாவின் தந்தை (ஷுரைஹ்) அவர்களே! இப்பெண் அநீதியிழைக்கப்பட்டுள்ளாள் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார்.
அப்போது நீதிபதி ஷுரைஹ் அவர்கள்: “ஷஃபிb அவர்களே! யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் இரவு நேரத்தில் அழுதுகொண்டுதான் தமது தந்தையிடம் வந்தார்கள்” எனப் பதிலளித்தார்.
{ நூல்: 'அத்துருகுல் ஹுக்மிய்யா' லிப்னில் கைய்யிம், 1/24 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ خاصمت إمرأة رجلا عند شريح القاضي وهي تبكي! فقال الشعبي: يا أبا أمية! ما أظنها إلا مظلومة!.*
*فقال: يا شعبي! إن إخوة يوسف جاؤوا اباهم عشاءا يّبكون! ]*
{ الطرق الحكمية لابن القيم، ١/٢٤ }
அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்கள் அழுதவர்களாக தமது தந்தையிடம் இரவு வேளையில் வந்தார்கள்.
எமது தந்தையே! எமது பொருட்களிடம் யூசுபை விட்டு விட்டு நாம் ஓடி விளையாடி (வெகுதூரம்) சென்றுவிட்டோம். அப்போது ஓநாய் அவரைத் தின்றுவிட்டது. நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புபவராக இல்லை என்று கூறினா்.
மேலும் அவர்கள் அவரது சட்டையின் மீது பொய்யான இரத்தத்தை(த் தடவிக்கொண்டு) வந்தனர். (அதற்கு அவர்களது தந்தை), 'இல்லை! உங்களின் உள்ளங்கள் ஏதோ ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காட்டிவிட்டன. எனவே, அழகிய பொறுமையே இதற்கு வழி. நீங்கள் வர்ணித்துக் கூறுபவற்றில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்' என்று கூறினார்”
( அல்குர்ஆன், 12: 16-18)
7)சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்!
முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு
அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட
நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் மையவாடியில் புதைத்ததன் மூலம் எம்மை நீ கேவலப்படுத்துகின்றாயா?” என்று கேட்டார். அப்போது,
அம்மனிதன்:“அந்த நாய், ஆயிரம் தீனார் தங்க நாணயங்களை நீதிபதிக்குக் கொடுக்கும்படியும் உறுதியாகவே எனக்கு வஸிய்யத் செய்திருந்தது!” என்று கூறினான். உடனே,
நீதிபதி: “இறந்து போன அந்த நாய்க்கு அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று பிரார்த்தித்தார்.
நீதிபதி குறித்தும், அந்த நேரத்தில் உடனடியாகவே எப்படி அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்? என்பது குறித்தும் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்! அப்போது அவர்களிடம்,
நீதிபதி: “நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள்; ஸாலிஹான, நல்ல இந்த நாய் பற்றி நான் ஆழமாக சிந்தனை செய்து பார்த்தேன்; அப்போது அது, குகைவாசிகளது நாயின் பரம்பரையிலிருந்து வந்தது என்பதாகக் கண்டு கொண்டேன்!” என்றார்.
இவ்வாறுதான் சில மனிதர்களும் இருக்கின்றனர். தமது ஆரம்பங்கள், முன்னைய நிலைப்பாடுகள் ஆகியவற்றில் அவர்கள் தவறாகப் பேசிவிட்டு, பின்னர் தமது விருப்பங்களுக்கும், தமது நலவுக்குமேற்ப ஆதரவாக நடந்து கொள்கின்றனர்!.
{ முகநூலில் ஒரு சகோதரர் }
يذكر أن رجلا دفن كلبا في مقبرة المسلمين، فشكاه الناس إلى القاضي، فاستدعاه القاضي وسأله عن حقيقة ما نسب إليه.
*فقال الرجل:* نعم؛ لقد أوصاني الكلب بذلك فنفذت وصيته!
*فقال القاضي:* ويحك! تدفن كلبا نجسا في مقبرة المسلمين وتستهزئ بنا؟!
*فقال الرجل:* وقد أوصاني الكلب أيضا أن أعطي ١٠٠٠ دينار للقاضي.
*فقال القاضي:* رحم الله الكلب الفقيد!
فتعجب الناس من القاضي، وكيف تغير في الحال!
*فقال لهم القاضي:* لا تعجبوا، فقد تأملت في أمر هذا الكلب الصالح فوجدته من نسل كلب أصحاب الكهف.
هكذا بعض الناس تتغير مبادئهم ومواقفهم فينطقون بالباطل ويدافعون عنه، حسب الرغبات وما تقتضيه مصلحتهم!.
8)நாவின் விபரீதங்களை நம்மில் பலர் உணர்வதில்லை!!
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்ட விடயங்களில் பார்வையைச் செலுத்துதல் போன்ற இன்னோரன்ன தீய விடயங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு முடியுமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான விடயமாகும்!!
மார்க்கம், உலகப் பற்றின்மை, வணக்க வழிபாட்டில் ஈடுபாடு ஆகியவற்றில் நல்லவர் என்பதாகச் சுட்டிக்காட்டப்படும் மனிதர், எதையுமே பொருட்படுத்தாதவராக அல்லாஹ் கோபிக்கும்படியான வார்த்தைகளைப் பேசிவிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள்! இவற்றில் ஒரேயொரு வார்த்தையை இவர் பேசுவதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட தூரம் அளவுக்கு (அந்தஸ்த்திலிருந்து) இறங்கி விடுகிறார்!
மானக்கேடான விடயங்கள் மற்றும் அநியாயம் ஆகியவற்றை விட்டும் பேணுதலாக இருக்கும் எத்தனையோ மனிதர்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள்! ஆனால், அவர்களில் ஒருவரது நாவோ உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்,மரணித்தவர்களின் மானங்களில் பொய் சொல்லி இட்டிக்கட்டிக்கொண்டிருக்கிறது. தான் சொல்வதை அவர் பொருட்படுத்துவதே கிடையாது!”
{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf', பக்கம்: 54 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
*[ ومن العجب أن الإنسان يهون عليه التّّحفّظ والإحتراز من أكل الحرام والظلم والزّنى والسرقة وشرب الخمر، ومن النظر المحرّم وغير ذلك. ويصعب عليه التّحفّظ من حركة لسانه!*
*حتى ترى الرّجل يشار إليه بالدّين والزّهد والعبادة، وهو يتكلم بالكلمات من سخط الله لا يلقي لها بالا. ينزل بالكلمة الواحدة منها أبعد ممّا بين المشرق والمغرب!*
*وكم ترى من رجل متورّع عن الفواحش والظلم، ولسانه يفري في أعراض الأحياء والأموات، ولا يبالي ما يقول]*
{ الجواب الكافي، ص - ٥٤ }
அல்லாஹ் கூறுகிறான்: “அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே நீர்) கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாகவே இருக்கின்றான்”. (அல்குர்ஆன், 17:53 )
9)கல்வித் தேடலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியப் பேரறிஞருக்கு, அவர்களின் அன்புத் தாய் எழுதிய கடிதம்!
இஸ்லாமியப் பேரறிஞர், 'ஷைகுல் இஸ்லாம்' இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் அவர், தாயை விட்டும் சில நாட்கள் தான் தூரமாகியிருப்பதற்காகவும், மார்க்க மற்றும் தஃவா விடயங்களுக்காக எகிப்தில் தங்க வேண்டியிருந்ததற்காகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு எழுதியிருந்தார். கடிதம் தாயை வந்தடைந்ததும் மகனுக்கு அந்தத் தாய் இப்படி பதில் எழுதினார்கள்:
எனது அன்பு மகன் அஹ்மத் இப்னு தைமிய்யாவுக்கு ....!
உன்மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அவனது பரக்கத்துகளும், அவனது மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் உண்டாவதாக! அல்லாஹ் மீது ஆணையாக! இதுபோன்ற ஒன்றுக்காகத்தான் மகனே உன்னை நான் வளர்த்தேன்; இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ சேவை செய்ய வேண்டும் என்பதற்காக உன்னை நான் நேர்ச்சை செய்துவிட்டேன்; மார்க்க ஷரீஆத் சட்டங்களில் நீ கவனம் செலுத்த வேண்டும் என்று உனக்கு நான் கற்றுத் தந்துமுள்ளேன்!
அன்பு மகனே! பல பிரதேசங்களில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ செய்கின்ற சேவையை விடவும், உனது மார்க்கத்துடன் உனக்கிருக்கும் நெருக்கத்தை விடவும், எனக்கருகில் நீ இருப்பதுதான் எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது என்று மட்டும் நீ நினைத்து விடாதே!
எனினும் என் அன்பு மகனே! உன் மீதுள்ள எனது உச்சகட்ட திருப்தி, உனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ மேற்கொண்டு வருகின்ற உனது பணியின் அளவைப் பொறுத்துத்தான் அது இருக்கும்!
என் அன்பு மகனே! நாளை அல்லாஹ்வுக்கு முன்னால், என்னை விட்டும் தூரமாகியிருந்த உன்னைப் பற்றி நிச்சயமாக நான் கேட்கப்படமாட்டேன். ஏனெனில், நீ எங்கிருந்தாய்? என்ன விடயத்தில் இருந்தாய்? என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!
என் அன்பு மகனே! அல்லாஹ்வின் மார்க்கத்திற்கான சேவையில், உனது இஸ்லாமியச் சகோதரர்களில் அவனது மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கான பணியில் நீ குறைவு செய்திருந்தால் அதற்காக வேண்டி அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னைப்பற்றி நான் விசாரிக்கப்படுவேன்; வினவப்படுவேன்!!
அல்லாஹ் உன்னைப் பொருந்திக்கொள்வானாக! உனது விருப்பத்தையும், வீரத்தையும் நன்மையால் அல்லாஹ் ஒளிரூட்டுவானாக! உனது நகர்வுகளை அவன் பலப்படுத்துவானாக!!
-- வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு....
{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 28/48 }
أرسل شيخ الإسلام إبن تيمية رحمه الله رسالة لأمه، يعتذر لها فيها عن بعده عنها لأيام، وإقامته في مصر لبعض شؤون الدين والدعوة. فلما وصلتها الرسالة ردّت عليه أمه فقالت:-
*[ ولدي الحبيب الرّضيّ / أحمد بن تيمية*
*وعليك السلام ورحمة الله وبركاته ومغفرته ورضوانه...*
*فإنه والله لمثل هذا ربّيتك، ولخدمة الإسلام والمسلمين نذرتك،وعلى شرائع الدين علمتك. ولا تظننن يا ولدي أن قربك مني أحب إلي من قربك من دينك، وخدمتك للإسلام والمسلمين في شتى الأمصار!*
*بل - ياولدي- إن غاية رضائي عليك لا يكون إلا بقدر ما تقدمه لدينك وللمسلمين.*
*وإني - يا ولدي - لن أسألك غدا أمام الله عن بعدك عني، لأني أعلم أين وفيم أنت، ولكن - يا أحمد - سأسألك أمام الله وأحاسبك إن قصرت في خدمة دين الله وخدمة أتباعه من إخوانك المسلمين، رضي الله عنك، وأنار بالخير دربك، وسدد خطاك ....*
*والسلام عليكم ورحمة الله وبركاته.........*
{ مجموع الفتاوى، ٢٨/ ٤٨ }
10)சிறந்த சந்ததிக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாள்வோம்!!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“தனது சந்ததி, சிறந்த சந்ததியாக இருப்பதற்கான காரணிகளைச் செய்ய வேண்டியது மனிதனுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்விடத்தில் (அதற்காக) அவன் பிரார்த்தனை செய்தலாகும்! அக்காரணிகளில் இது மிகப்பெரியதுமாகும். தனது வாலிபத்தை முழுமையாக அடைந்த ஒருவன் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். 'அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக்கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்காக என் சந்ததியில் சீர்திருத்தத்தைச் செய்வாயாக!'என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்”.
(அல்குர்ஆன், 46:15)
சந்ததிச் சீர்திருத்தம் என்பது, மிக வேண்டப்படுகின்ற விடயம் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், சிறந்த சந்ததிதான் இவ்வுலக வாழ்க்கையிலும்,மரணத்தின் பின்னரான வாழ்க்கையிலும் உனக்குப் பயனளிக்கும்!”.
{ நூல்: 'தப்ஸீர் சூரது ஆல இம்ரான்', 1/238 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*[ ينبغي للإنسان أن يفعل الأسباب التي تكون بها ذرّيّته طيبة، منها دعاء الله، وهو من أكبر الأسباب، وقد ذكر الله سبحانه وتعالى عن الرجل يبلغ أشدّه أنه يقول: « حتى إذا بلغ أشدّه وبلغ أربعين سنة قال ربّ أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليّ وعلى والديّ وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذرّيّتي »*
*ولا شك أن صلاح الذّرّيّة أمر مطلوب؛ لأن الذّرّيّة الصالحة تنفعك في الحياة وفي الممات ]*
{ تفسير سورة آل عمران ، ١/ ٢٣٨ }
அல்லாஹ் கூறுகிறான்:
“மேலும் அவர்கள், 'எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் கண் குளிர்ச்சியை எமக்கு வழங்குவாயாக! பயபக்தியாளர்களுக்கு எம்மை முன்மாதிரிமிக்கவர்களாகவும் ஆக்குவாயாக! என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்”
(அல்குர்ஆன், 25:74)
✍தமிழில்✍
அஷ்ஷெய்க் மெளலவிN.P.ஜுனைத் காஸிமி,மதனி
இன்ஷா அல்லாஹ் தொடரும்......✍
@Islaam For All Peoples
Like👍 And Follow Our Islaam For All Peoples Fb page:
https://www.facebook.com/islaam.community/
Subscribe Our Islaam For All Peoples YouTube channel:
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6
http://islaamforallpeoples.blogspot.in/2018/04/b.html
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
Comments
Post a Comment