இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் [தொடர் 1]
بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
[தொடர் 1]
நுழைவாயில்
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
வழிகெட்ட பிரிவுகளின் வருகை
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் சீர்குலைக்கும் அனைத்து வழிகெட்ட பிரிவுகளின் தோற்றம், வருகை பற்றி ஆய்வு செய்தால் அவை ஒவ்வொன்றும் குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் தமது சித்தாந்தங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் ஆதாரங்களாக சித்தரித்துக் கொண்டு முளைத்திருப்பதையும், பிரச்சாரம் செய்திருப்பதையும் பார்க்கின்றோம். இவற்றின் பின்னணியில் யூதக்கும்பலின் மறைமுகமான சதி இருந்தே வந்திருக்கின்றது என்பது வெள்ளிடை மலை.
‘இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்’ என்ற தலைப்பில் இந்த நூலில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகளில் ‘அஸ்மா, வஸ்ஸிபாத்தை’ திரித்தும், பொருள் மாற்றம் செய்தும் மறுத்தும் கூறும் ‘ஜஹ்மிய்யா’ சிந்தனைத் தாக்கம் பெற்ற அஷ்அரிய்யா என்ற பிரிவினர், கப்ரு வணங்கிகள், ஹவாரிஜ்கள், ஷீஆக்கள், காதியானிகள், போராக்கள், ஆகிய பிரிவுகள் பற்றியும், இஸ்லாமியக் கொள்கையில் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் கூற இருக்கின்றோம்.
இஸ்லாமிய வரலாற்றின் வழிகெட்ட பிரிவுகளின் தரப்படுத்தல் வரிசையில் ‘முதலாவதாக ஹவாரிஜ்கள், அதன் பின்னர் ராபிழாக்கள் எனப்படும் ஷீஆக்கள், பின்னர் அலி (ரழி) அவர்களைக் குறைகாணும் ‘நவாஸிப்கள்’, அதன் பின்னர் ‘கத்ரிய்யா’, ஜப்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, ஆகிய பிரிவுகள் இஸ்லாமிய ஆய்வாளர்கள் மூலம் தரப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. நாம் மேற் சொன்ன இந்தப்பிரிவுகளுடன் கப்று வணங்கிகளை நமது நூலின் முதல் பிரிவாக இனம் காட்டியுள்ளோம்.
இவர்களை காரசாரமாக விமர்சனம் செய்த அறிஞர் பெருமக்கள், நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில் நபித்துவத்தை வாதாடிய பொய்யன் முஸைலமாவின் நபித்துவ வாதம் பற்றி பேசாமல் விட்டுவைத்துள்ளனர் என்பதை அறிவீர்கள்.
மாவீரர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களால் முளையிலேயே அவர்கள் கிள்ளி எறியப்பட்டு, அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டதால் பொய் நபித்துவம் பற்றி அக்கால அறிஞர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. குப்பையை மீண்டும் கிளறுவதா? என்ற பாணியில் விட்டுவைத்துள்ளார்கள் போலும். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).
எனினும், காதியானிகள் என்ற நவீன முஸைலமாக்களது வாரசுகளின் ஊடுருவல் நமது நாட்டில் பரவலாகக் காணப்படுவதாலும், மார்க்க அடிப்படை தெரியாத, படித்த மக்கள் பலர் அவர்களின் வலையில் சிக்கிக் கொள்வதாலும் காதியானிகளைப் பற்றிய ஆய்வும் நமது இந்த நூலில் இடம் பெறுகின்றது. இந்த நூலைப்படிக்கும் நீங்கள் இதைத் தொகுத்து எழுதிய எனக்காகவும், எனது குடும்பத்திற்காகவும், சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ் நமது பணியை அங்கீகரித்து அருள் செய்வானாக!
இவண்:
மெளலவி எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
தொடர்_2
http://islaamforallpeoples.blogspot.com/2018/08/2.html
Comments
Post a Comment