ரமழானின் பூரண பயனைப் பெற சில வழிகாட்டல்கள்!!!
بسم الله الرحمن الرحيم
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)
[ விரிவுரையாளர் - தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்.
தலைவர் - வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ]
01) உளத்தூய்மையோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்:
வணக்க வழிபாடுகளின் உயிர்நாடி 'இஹ்லாஸ்' எனும் உளத்தூய்மையாகும். நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது ஒரு முக்கிய நிபந்தனை என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளையாகும். நற்காரியங்களைச் செய்கின்றபோது தூய்மையான எண்ணமும், அல்லாஹ்வுக்காக மட்டும் செய்கிறேன் என்ற உளத்தூய்மையும் இருக்கின்றபோதுதான் அல்லாஹ்விடத்தில் அதற்குப் பெறுமதியும் அதற்கான வெகுமதியும் கிடைக்கும்.
பசித்து, தாகித்து, உடலியல் ரீதியான ஆசைகளைத் தணித்து கஷ்டத்துடன் நோன்பு நோற்றிருக்கும் ஒரு நோன்பாளி உளத்தூய்மையின்றி அதை நிறைவேற்றினால் அதற்கு எந்தப் பெறுமானமும் இருக்காது. அவன் பட்ட சிரமங்களுக்கு எதுவித பிரயோசனமும் இருக்காது. எனவே, கட்டாயம் 'இஹ்லாஸ்' என்ற விடயத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
02) ரமழானின் வருகையை நபியவர்கள் சுபசோபனமாகச் சொன்னதில் உள்ள தாத்பரியத்தை விளங்குதல்:
விருப்புடனும், உத்வேகத்துடனும், நன்மைகளைப் பெற வேண்டும் என்ற ஆசையுடனும் ரமழானில் வணக்க வழிபாடுகளில் திளைக்க வேண்டுமாக இருந்தால் ரமழானின் வருகை குறித்து நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தனது தோழர்களுக்கு சுபசோபனமாகச் சொன்னதன் தாத்பரியத்தை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். நபியவர்கள் சுபசோபனமாக ஒரு விடயத்தைக் கூறுகிறார்கள் என்றால் அதற்கு மிகப்பெரும் பெறுமதி இருக்கவே செய்யும் என்பதை அறிகின்றபோது ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் ஒரு முஸ்லிமுக்கு நிச்சயம் ஏற்படவே செய்யும்.
03) நோன்பு மற்றும் நோன்பாளியின் மகிமையை நினைத்துப் பார்த்தல்:
ரமழானின் மகத்துவமும், நோன்பாளிக்குக் கிடைக்கும் வெகுமதிகளும் நபிமொழிகளில் விபரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சுருக்கமாக அவற்றை அடையாளப்படுத்தலாம்:
01- நோன்பாளிக்குரிய முழுமையான கூலியை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.
02- அல்லாஹ்வுக்காக ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்றால், நரகத்தை விட்டும் அவரை 70 ஆண்டுகள் அவன் தூரப்படுத்தி விடுகிறான்.
03- மறுமையில் சுவர்க்கம் நுழைகின்ற வரைக்கும் நோன்பாளிக்கு நோன்பு சிபாரிசு செய்துகொண்டிருக்கும்.
04- சுவர்க்கத்தில் 'ரய்யான்' என்றொரு வாசல் உண்டு. அதனூடாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
05- ரமழான், முன்சென்ற பாவங்களை அழித்து விடும்.
06- ரமழானில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படும்.
07- நோன்பாளியின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்.
08- நோன்பாளியின் வாய் வாடை, கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடத்தில் மணமானது.
09- நோன்பாளிகள் நோன்பு திறக்கின்ற வரைக்கும் வானவர்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுகின்றனர்.
10- ஆயிரம் மாதங்களை விட சிறந்ததோர் இரவு ரமழானில் இருக்கின்றது.
நோன்பின் இவ்வாறான தாத்பரியங்களையும், நோன்பாளிகளுக்குரிய வெகுமதிகளையும் சிந்தித்துணர்வதன் மூலமாக ரமழானை முழுமையாகப் பயன்படுத்தி அதில் பூரண பயனைப் பெறலாம்.
04) ரமழானை அதிக வணக்க வழிபாடுகளில் கழித்ததே நபிகளாரின் வழிமுறை என்பதை அறிதல்:
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ஏனைய மாதங்களைக் காட்டிலும் ரமழானிலேயே அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். தொழுகை, திக்ர், திலாவதுல் குர்ஆன், பிரார்த்தனை, தானதர்மம் செய்தல் போன்ற இன்னோரன்ன வணக்கங்கங்களைச் செய்வதில் அவர்கள் காட்டிய ஆர்வம் நபிமொழிகளில் விபரிக்கப்பட்டிருக்கின்றது. தானதர்மம் வழங்குவதில் அவர்களிடம் காணப்பட்ட வேகம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“நபிகள் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபியவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவும் - ரமழான் முடியும்வரை - நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி அவர்களைச் சந்திப்பார்கள். அப்போது, நபியவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபியவர்களைச் சந்திக்கும்போது, மழைக்காற்றை விட அதிகமாக நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் வாரி வழங்குவார்கள்”.
(நூல் : புகாரி, நபிமொழி இலக்கம் - 1902)
எனவே, நபியவர்களைப் பின்பற்றி ரமழானில் அதிக வணக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் இறைநெருக்கத்தைப் பெற முயல வேண்டும்.
05) நோன்பை 'தனக்குரியது' என அல்லாஹ் பிரத்தியேகப்படுத்தியுள்ளதை மனதிற்கொள்ளல்:
நோன்பை, ஏனைய வணக்கங்களை விட 'தனக்குரியது' என அல்லாஹ் பிரத்தியேகப்படுத்தியிருப்பது நோன்பின் மாண்பை உணர்த்தப் போதுமானதாகும். நோன்புக்கான கூலியும் வெகுமதியும் எவ்வளவு என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்ததாகும். இதை மனதிற்கொண்டு நோன்புகளை நோற்று, இதர வணக்கங்களையும் செய்கின்றபோது ரமழானின் பூரண பயனைப் பெற பேருதவியாக இருக்கும்.
06) 'நோன்பு இறைவனிடம் பரிந்துரை செய்யும்' என்பதை உணர்ந்து செயற்படல்:
நோன்பு நோற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்ற இன்னொரு முக்கிய விடயம்தான், 'நோன்பாளிக்கு நோன்பு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும்' என்பதை உணர்ந்து செயற்படுவதாகும். நோன்பு, பாவங்களை அழிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருப்பதைப் போலவே இக்கட்டான, தர்மசங்கடமான நிலையில் துணை நிற்கும் சிறந்ததொரு தோழனாகவும் இருக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்:
“நோன்பும் குர்ஆனும் தம்மைப் பயன்படுத்திய மனிதருக்காக மறுமையில் பரிந்துரை செய்யும். நோன்பு தன் இரட்சகனிடம், 'எனது இரட்சகனே! பகல் பொழுதில் சாப்பிடுவதை விட்டும், ஆசைகளை நிறைவேற்றுவதை விட்டும் இவரை நான் தடுத்தேன். (இவரும் கட்டுப்பட்டார்.) ௭னவே, இவர் விடயத்தில் எனது பரிந்துரையை நீ ஏற்றுக்கொள்வாயாக!' என்று நோன்பு பரிந்துரை செய்யும். இப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்......... ”.
(நூல்: முஸ்னத் அஹ்மத்)
மேற்படி விடயங்களைக் கடைப்பிடித்து நடப்பதன் மூலம் ரமழானின் பூரண பயனைப் பெற முயற்சிப்போமாக! வல்லமை பொருந்திய ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக!!!
ரமழான் சிறப்பு உபதேசங்கள்
1)நோன்பு கடமையாக்கப்பட்டதின் நோக்கம் என்னவென்றால்!!!
https://youtu.be/nGvl2qPsYJA
2)மனிதனுடையை உள்ளத்தில் தக்வாவை ஆழமாக பதிய வைக்கும் நிகழ்வு!!!
https://youtu.be/NpdWfQaQFyQ
3)தக்வா மனிதர்களை புனிதர்களாக மற்றும் நிகழ்வு!!!
https://youtu.be/H9TzRVyNm_8
4)ஒரு நோன்பாளி நோன்பு வைத்த நிலையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்!!!
https://youtu.be/3n1FDCgsXaI
Comments
Post a Comment